விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுர கலசங்கள் திருட்டு


விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுர கலசங்கள் திருட்டு
x
தினத்தந்தி 2 March 2022 1:20 AM IST (Updated: 2 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுர கலசங்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன. 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 100 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது.

3 கலசங்கள் திருட்டு

நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு காவலர்கள் மட்டும் கண்காணிப்பு பணியில் இருந்தனர்.

நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் சன்னதியில் கோபுர தரிசனம் செய்தபோது, அங்கு 3 கலசங்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நள்ளிரவு 12 மணியளவில் கோபுரத்தில் கலசங்கள் இருந்ததை பார்த்ததாக தெரிவித்தனர். அதன்பிறகே 3 கலசங்களையும் மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ரூ.20 லட்சம் மதிப்பு

கோவிலில் உள்ள 32 கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அம்மன் சன்னதிக்கு மேல் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

திருட்டு போன 3 கலசங்களின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story