நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை; மு.க ஸ்டாலின் டுவிட்


நீட்  தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை; மு.க ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 2 March 2022 9:33 PM IST (Updated: 2 March 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு அவர்களை மீட்பதில் கவனம் செலுத்துங்கள் என மத்திய அரசை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மாணவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு அவர்களை மீட்பதில் கவனம் செலுத்துங்கள் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

இக்கட்டான தருணத்தில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தனித்துவிடப்பட்டதாக  வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. போர் தாக்குதல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், அவர்களை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, மாணவர்களை பத்திரமாக மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அனைவரையும் பத்திரமாக மீட்பது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும். தேவையற்ற கருத்துக்களை மந்திரிகள் கூறுவதை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட் பதிவில், ‘உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் - எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். 

உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் #நீட்  தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும்! அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்! ” என்று தெரிவித்துள்ளார். 

Next Story