வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2022 12:26 AM IST (Updated: 3 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

இப்பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கும்போது ஆண்கள் என அடையாளப்படுத்தினால் ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகளும், பெண்கள் என்று அடையாளப்படுத்தினால், பெண்களுக்கான நடைமுறைகளும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சலுகை வேண்டும்

இந்த அறிவிப்பை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு, எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வுகளிலும், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்க கோரியும் மூன்றாம் பாலினத்தவர்களான தேனியைச் சேர்ந்த ஆராதனா, சாரதா உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சலுகை இல்லை

அரசு பணியிடங்களை நிரப்பும்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இதுவரை தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பெண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தவொரு இடஒதுக்கீடோ அல்லது சலுகையோ வழங்கப்படுவதில்லை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக குறி்ப்பிட்ட சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்தவொரு தடையும் இல்லை.

பெண்களுக்கான சலுகை

எனவே, 2018, 2019 மற்றும் 2020-ஆண்டுகளில் மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

மனுதாரர்கள் அனைவரும் இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி, தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் அவர்களுக்கு பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தேர்வு நடைமுறைகளை சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் முடிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

எதிர்காலத்தில், அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமின்றி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story