பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அமைச்சரவை 5-ந் தேதி கூடுகிறது


பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அமைச்சரவை 5-ந் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 3 March 2022 4:43 AM IST (Updated: 3 March 2022 4:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 5-ந் தேதி கூடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-ம் வாரத்தில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் 18-ந் தேதியன்றும், வேளாண்மை பட்ஜெட் 19-ந் தேதியன்றும் தாக்கல் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாராஜனும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்வார்கள்.

இந்த பட்ஜெட்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக தலைமைச் செயலகத்தில் 5-ந் தேதி அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் 2 பட்ஜெட்களுக்கும் ஒப்புதல் வழங்குவதோடு, புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கலெக்டர்களுடன் ஆலோசனை

இதற்கிடையே அடுத்த வாரத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோடியாக அனைத்து மாவட்ட கலெக் டர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெறுகிறது. கலெக்டர் மாநாட்டில் கலெக்டர்களின் செயல்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை வழங்குகிறார்.

Next Story