ரெயிலில் ஏற விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தும் உக்ரைன் நாட்டினர் - திருச்சி மாணவர் உருக்கம்


ரெயிலில் ஏற விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தும்  உக்ரைன் நாட்டினர் - திருச்சி மாணவர் உருக்கம்
x
தினத்தந்தி 3 March 2022 12:24 PM IST (Updated: 3 March 2022 12:24 PM IST)
t-max-icont-min-icon

எங்களை இந்திய அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக நாங்கள் எங்கு செல்வது, என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு கூட எடுக்க முடியாமல் தவிக்கிறோம் என கூறுகிறோம்

திருச்சி:

உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 8-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மற்றும் நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்தநிலையில் உக்ரைனில் தவிக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் உருக்கமான ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் வேணுகோபால் நகரை சேர்ந்த கிப்சன் ஜோசப் செல்வராஜ் என்ற அந்த மாணவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

தற்போது உக்ரைன் நாட்டில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக கார்கீவ் நகரில் ரஷியா நாட்டு படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நாங்கள் இந்திய தூதரகத்தை அணுகி உதவி கேட்டோம். நேற்று அவர்கள் மாலை 6 மணிக்குள் அனைவரும் கார்கீவ் நகரை விட்டு வெளியேற வேண்டும் என்று எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும்  3 மணிக்கே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு விடுங்கள் என்றும் கூறியது. நாங்கள் அந்த பகுதியில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் ஏறி பயணிப்பதற்காக சென்றோம். ரெயிலில் ஏற முயன்றபோது, அங்கிருந்த உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எங்களை தடுத்தனர்.

மேலும் இந்தியர்களான எங்களை மிதித்தும், அடித்தும் கீழே தள்ளிவிட்டார்கள். காரணம் கேட்டபோது எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆக்ரோ‌ஷமான தாக்குதலால் நிலைகுலைந்த நாங்கள் உயிருக்கு அஞ்சி அங்கிருந்து புறப்பட்டோம்.

தொடர்ந்து கார்கீவ் நகரின் எல்லைப்பகுதிக்கு சுமார் 6 கி.மீ. தூரம் நடந்தே வந்து மற்றொரு ரெயில் நிலையத்தில் தற்போது காத்திருக்கிறோம். காலை 7 மணிக்கு வந்து சேர்ந்த நாங்கள் தற்போது வரை தண்ணீர் கூட குடிக்கவில்லை. எதுவும் இங்கு கிடைக்காததால் பசியால் தவிக்கிறோம்.

என்னை போன்று இங்கு 200 இந்திய மாணவர்கள் வேறு இடம் செல்வதற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள்தான் எங்களுக்கு 2 பிஸ்கட்டுகள் கொடுத்தனர். இந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி கிடையாது. நான் அவர்களுக்கு தெரியாமல் செல்பி மூலம் இந்த வீடியோ பதிவில் பேசுகிறேன்.

எனவே எங்களை இந்திய அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக நாங்கள் எங்கு செல்வது, என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு கூட எடுக்க முடியாமல் தவிக்கிறோம்.

இவ்வாறு அவர் உருக்கமான அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


Next Story