நகைக்காக பாட்டியை கொன்ற பேரன் கைது
திருச்சூர் அருகே நகைக்காக பாட்டியை கொன்ற பேரன் கைது செய்யப்பட்டார்.
பெரும்பாவூர்,
திருச்சூர் மாவட்டம் கடலாசேரி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி கவுசல்யா(வயது 78). வேலாயுதம் ஏற்கனவே இறந்துவிட்டதால், கவுசல்யா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென கட்டிலில் பிணமாக கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர் ந்து கவுசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கவுசல்யா மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் அவர் அணிந்திருந்த 2 வளையல்கள் மற்றும் செயின் ஆகியவை காணாமல் போயிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கவுசல்யாவின் பேரன் கோகுல்(32) என்பவர் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோகுலை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கவுசல்யாவை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் குடிபோதைக்கு அடிமையான கோகுல் அடிக்கடி பணம் கேட்டு கவுசல்யாவை தொந்தரவு செய்து வந்ததும், சம்பவத்தன்று பணம் தராததால் அவர் அணிந்திருந்த நகையை திருட கொலை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து திருச்சூர் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story