தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு


தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2022 8:49 PM IST (Updated: 3 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

தேனி:
நகராட்சி தலைவர்
தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் மொத்தம் 177 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்த 6 நகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

 இந்நிலையில், இதில் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும், மற்ற 5 நகராட்சி தலைவர் பதவிகள் தி.மு.க.வுக்கும் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளரை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். மற்ற 5 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்தது.

அதன்படி 6 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறிப்பு குறித்த விவரங்கள் வருமாறு:-
தேனி அல்லிநகரம்-சற்குணம்
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 22-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 69. பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய கணவர் ராஜகுமாரன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு தேனி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜகுமாரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

சற்குணத்தின் மாமனார் என்.ஆர்.தியாகராஜன் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். அவர், தேனி எம்.எல்.ஏ., தமிழக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர், மதுரை ஜில்லா போர்டு தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். என்.ஆர்.தியாகராஜன் பெருந்தலைவர் காமராஜருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். தேனி நகரின் முக்கிய குடியிருப்பான என்.ஆர்.டி. நகர் அவருடைய பெயரில் அழைக்கப்படுகிறது. 

தேனியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையும் என்.ஆர்.டி. நினைவு அரசு மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. சற்குணம்-ராஜகுமாரன் தம்பதியின் மகன் டாக்டர் தியாகராஜன் இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளராக உள்ளார். அவர் தேனியில் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்.
பெரியகுளம்-சுனிதா
பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுமிதா அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 39. எம்.காம். படித்துள்ளார். இவருடைய கணவர் சிவக்குமார் தேனி மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளராகவும், பெரியகுளம் கோர்ட்டில் கூடுதல் அரசு வக்கீலாகவும் உள்ளார்.

சுமிதா முதல் முறையாக நகர்மன்ற கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு வாசுதேவ் (9) என்ற மகன் உள்ளார்.
போடி-ராஜராஜேஸ்வரி
போடி நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜராஜேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 46. பி.காம். பட்டப்படிப்பு படித்துள்ளார். போடி நகர அரிமா சங்க உறுப்பினராக உள்ளார். இவருடைய கணவர் சங்கர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போடி நகராட்சி 29-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

மேலும் அவர், போடி நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது தி.மு.க. தலைமைக்குழு செயற்குழு உறுப்பினராகவும் சங்கர் உள்ளார்.
இவர்களுக்கு சோனாலி என்ற மகளும், லோகேஸ்வர் என்ற மகனும் உள்ளனர். சோனாலி பி.டெக் படித்துள்ளார். லோகேஸ்வர் எம்.பி.ஏ. பட்டதாரி.
கம்பம்-வனிதா நெப்போலியன்
கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வனிதா நெப்போலியன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 47. 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 

இவருடைய கணவர் நெப்போலியன் வக்கீலாகவும், கம்பம் வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவர்களுக்கு சிவகவுசிகா, சங்கமித்திரை என்ற மகள்களும், அஸ்வத்தாமன் என்ற மகனும் உள்ளனர். சிவகவுசிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சங்கமித்திரை, அஸ்வத்தாமன் சட்டப்படிப்பு படித்துள்ளனர்.
கூடலூர்-பத்மாவதி லோகன்துரை
கூடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பத்மாவதி லோகன்துரை அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கு வயது 43. 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருடைய கணவர் லோகன்துரை கூடலூர் நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் அவர் கூடலூர் தி.மு.க. நகர செயலாளராகவும் உள்ளார்.

இவர்களுக்கு சவுமியா என்ற மகளும், கவுசிக் என்ற மகனும் உள்ளனர். பத்மாவதியின் மாமனார் சின்னத்தேவர் கூடலூர் பேரூராட்சியாக இருந்த போது, 1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக இருந்தார்.
சின்னமனூர்-அய்யம்மாள் ராமு
சின்னமனூர் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக 25-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அய்யம்மாள் ராமு அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இவருக்கு வயது 58. 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவருடைய கணவர் இறந்து விட்டார். அய்யம்மாள் ராமுவின் மகன் முத்துக்குமார் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார்.
துணைத்தலைவர்
அதுபோல், தி.மு.க. கூட்டணியில் போடி நகராட்சி துணைத்தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் கவுன்சிலர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற நகராட்சிகளுக்கான துணைத்தலைவர் பதவிகளில் தி.மு.க.வினர் போட்டியிடுகின்றனர். அதற்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Next Story