சசிகலா விவகாரம்: கடம்பூர் ராஜு பேட்டி


சசிகலா விவகாரம்: கடம்பூர் ராஜு பேட்டி
x
தினத்தந்தி 3 March 2022 9:35 PM IST (Updated: 3 March 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழு தான் முடிவெடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

கோவில்பட்டி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் நிபந்தனையின்றி அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "காலம் கனியும். காத்திருங்கள்" என்று பதிலளித்தார்.

பின்னர் அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் அதே பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டுக்கு நேற்று காலை வந்தார். அவரை சந்திக்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு 11.30 மணியளவில் காரில் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று கூறிவிட்டு பண்ணை வீட்டுக்குள் சென்று விட்டார்.
பின்னர் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அப்போது, அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரனை இணைப்பது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆலோசனை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பண்ணை வீட்டில் இருந்து ஆர்.பி.உதயகுமார் வெளியே வந்தார். அவரிடம் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வமும் பண்ணை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவரிடம் அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "நான் பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.  

இந்தநிலையில்,  கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவுதான் ஏற்படும் என அவர் கூறினார். 

இதற்கிடையில், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அதில்  அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக எம்.பி. சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர். 

Next Story