நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு: எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை திருமாவளவன் பேட்டி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு: எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கவில்லை திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2022 12:25 AM IST (Updated: 4 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த பதவி இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம் என திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியுடன் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்-துணை தலைவர், பேரூராட்சி தலைவர்-துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவி இடங்களுக்கான பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டது. பட்டியல் வெளியான சிறிது நேரத்திலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை மேயர் பதவி

கடலூர் மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு பா.தாமரைச்செல்வன் நிறுத்தப்படுகிறார். நகராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜெயங்கொண்டத்தில் சுமதி சிவக்குமாரும், நெல்லிக்குப்பத்தில் கிரிஜா திருமாறனும் நிறுத்தப்படுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு திண்டிவனத்தில் ராஜலட்சுமி வெற்றிவேல், பெரியகுளத்தில் பிரேம்குமார், ராணிப்பேட்டையில் சீ.மா.ரமேஷ்கர்ணாவும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெண்ணாடத்தில் அமுதலட்சுமி ஆற்றலரசு, காடையாம்பட்டியில் குமார், பொ.மல்லாபுரத்தில் சின்னவேடியும் நிறுத்தப்படுகின்றனர்.

அதேபோல் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு கடத்தூரில் வினோத், திருப்போரூரில் பாரதி சமரன், புவனகிரியில் லலிதா, கொளத்தூரில் கோவிந்தம்மாள் அம்மாசி, வேப்பத்தூரில் பொன்.கி.காமராஜ், அனுமந்தன்பட்டியில் ஆரோக்கியசாமி, ஓவேலியில் சகாதேவனும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்,’ என்றார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது:-

எதிர்பார்த்தது கிடைக்கவில்லை

ஒரு மாநகராட்சி மேயர் பதவியும், 9 இடங்களில் துணை மேயர் பதவியிடங்களும் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மட்டும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி கிடைத்திருந்தால் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த இடங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை இந்த முறைதான் சந்தித்து இருக்கிறோம். பா.ஜ.க. 822 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதை மறைப்பதற்காக தான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3-வது இடம் பிடித்திருக்கிறோம் என பா.ஜ.க. கூறிகொண்டிருக்கிறது.

மதிப்பை இழந்தது

உள்ளாட்சி தேர்தலில் முதல் இடம் பிடித்திருக்கும் தி.மு.க.வை, அ.தி.மு.க.வால் எட்டவும் முடியாது. தொடவும் முடியாது. அதனால், அ.தி.மு.க.வின் வாக்கு எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று கூறவில்லை. அ.தி.மு.க.வை வழிநடத்தி கொண்டு செல்ல சரியான ஆளுமை அங்கு இல்லை என்பதே உண்மை. பா.ஜ.க.வின் இழுத்த இழுப்புக்கெல்லாம் அ.தி.மு.க. சென்றதாலும், பா.ஜ.க.வை தோளில் தூக்கி சுமந்ததாலும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. தன்னுடைய நன்மதிப்பை தற்போது இழந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story