உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு


உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு
x
தினத்தந்தி 4 March 2022 4:25 AM IST (Updated: 4 March 2022 4:25 AM IST)
t-max-icont-min-icon

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க, சிறப்பு ஒருங்கிணைப்பு குழுவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருக்கிறார்.

சென்னை,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ெதாடுத்துள்ள போர் காரணமாக அங்குள்ளஇந்தியர்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

மீட்பு நடவடிக்கை

உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உக்ரைனையொட்டி உள்ள நாடுகளுக்கு மத்திய மந்திரிகளையும் அனுப்பி இருக்கிறது. அவர்களது மேற்பார்வையில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு குழுவை அமைத்து இருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அவசர கட்டுப்பாட்டு மையங்கள்

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க மாநில, மாவட்ட அளவிலும், டெல்லியிலும் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரை 3,025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த 2,223 மாணவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து வரும் தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஆலோசனை

மீட்பு பணிகளை தமிழக அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, மத்திய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளர் கே.ராஜாராமன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

3-ந் தேதி (நேற்று) காலை 6 மணி வரை 193 மாணவர்கள் தமிழகம் திரும்பி உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் செலவில் அவர்களது தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த எஞ்சியுள்ள மாணவர்களை உடனடியாக மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஷியா வழியாக அழைத்து வர

கூட்ட முடிவில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் எஞ்சியுள்ள தமிழக மாணவர்களை மீட்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷிய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.

ஒருங்கிணைப்பு குழு

உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்கு சென்று, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை சார்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரிக்கு கடிதம்

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க, பிரத்யேகமாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. இதுவரை, 2,223 மாணவர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, அவர்களின் விவரங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் பகிரப்பட்டுள்ளன.

தனிக்கவனம் செலுத்த வேண்டும்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளையில், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள்மட்டுமே தாய்நாடு திரும்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து அழைத்துவரப்படும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.

நிலைமை மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி போன்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலான மாணவர்கள், பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மோசமான நிலை

மோசமான மற்றும் நிச்சயமற்ற நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்.

எனவே, ரஷிய எல்லைகள் வழியாக மாணவர்களை அழைத்து வருவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும். இந்தப் பிரச்சினையை ரஷியாவின் கவனத்திற்கு அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியாவிற்கு 1,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்து இந்தியாவிற்கு திரும்ப காத்திருக்கிறார்கள். அந்த மாணவர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்திட ஏதுவாக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோரை, 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான அனுமதியை வெளியுறவு அமைச்சகம் விரைந்து வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story