மேயர், நகராட்சி தலைவர்கள் மக்களின் வளர்ச்சி, நலப்பணிக்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
மேயர், நகராட்சி தலைவர்கள் மக்களின் வளர்ச்சி, நலப்பணிக்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சிக்கு நேரடித் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக பதவியேற்றவர்கள் மற்றும் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் கட்சி பாகுபாடின்றி தங்கள் பகுதியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலப்பணிக்காகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.
மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதியில் அடிப்படைத் தேவையான, குடிநீர் வழங்கல், தெரு சுத்தம், கழிவுநீர் செல்லும் பாதை பராமரிப்பு, மின்கம்பம், விளக்கு பொருத்துதல், குப்பை அகற்றுதல், மழைநீர், கழிவுநீர் தேக்கமடையாமல் செல்லுதல் ஆகியவற்றில் உடனடிக்கவனம் செலுத்த வேண்டும்.
தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ள நீர், மழை நீர் தேக்கம், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காத வகையில் பணி நடைபெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story