தமிழகத்தில் செலுத்திய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது


தமிழகத்தில் செலுத்திய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 5 March 2022 3:33 AM IST (Updated: 5 March 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை 22 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. இந்தநிலையில் சனிக்கிழமை (இன்று) 23-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. இந்த முகாமில் முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி என அனைத்து தரப்பினருக்கும் போடப்படும்.

இந்தியாவில் மராட்டியம், உத்திரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை செலுத்திக்கொண்ட தடுப்பூசி எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிகரமான இலக்கு தான்.

24 மணி நேரமும் தடுப்பூசி

முதல் தவணை தடுப்பூசி 91.54 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 72.62 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 83.19 சதவீதமும், 2-வது தடுப்பூசி 47.17 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தவரை இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 264 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சதவீத அடிப்படையில் 76.57 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 67 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

4-வது அலை

கான்பூர் ஐ.ஐ.டி.யில் மேற்கொண்ட ஆய்வில் ஜூன் மாதம் 22-ந் தேதி 4-வது அலை உருவாகும் என கணித்திருக்கிறார்கள். இதை புறந்தள்ளி விடவும் முடியாது.

மருத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக அது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் கூட, இதற்கு பிறகும் இது போன்ற அலைகளில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு.

முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் கொஞ்ச நாளைக்கு கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story