கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று சிஷ்யா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சிஷ்யா பள்ளி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
சிஷ்யா பள்ளியினுடைய ஐம்பதாவது ஆண்டுவிழா, பொன்விழா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சிஷ்யா பள்ளியின் அறங்காவலர் திரு.சலீம் தாமஸ் அவர்களே!
பள்ளியினுடைய முதல்வர் திருமதி ஓமனா தாமஸ் அவர்களே!
ஆசிரியர் பெருமக்களே!
பெற்றோர்களே!
என் பாசத்திற்கும், அன்பிற்கும் உரிய மாணவச் செல்வங்களே!
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
கல்வி என்பது மனிதச் சமுதாயத்தினுடைய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தரமான கல்விதான், ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி, அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய கல்வியினை வழங்கும் நிறுவனமாக இந்த 'சிஷ்யா பள்ளி' செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1972-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பள்ளி, 1986 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மேனிலைக் கல்வியை வழங்கி வந்து கொண்டிருக்கிறது.
கற்றல் - கற்பித்தல் முறையில், தங்களுக்கெனத் தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிஷ்யா பள்ளி, திரு. கே.ஐ. தாமஸ் அவர்களது சீரிய முயற்சியால் நிறுவப்பட்டது. அவருடைய கனவுகளை மெய்ப்பிக்கும் பணியை, இந்தக் கல்வி நிறுவனம் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது, அது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று, மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் என்ற கிராமத்தில் பிறந்த திரு. தாமஸ் அவர்கள், சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில், லண்டன் மற்றும் எடின்பர்க் நகரங்களில் முதுகலைப் படிப்பு பயின்ற அவர், சென்னை, ராஜ்கோட், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். பின்னர், ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியை வழிநடத்தி, அந்தப் பள்ளிக்கெனத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இருபதாண்டுகள் அங்குப் பணியாற்றிய பின் அவர் ஓய்வுபெற்றதற்குப் பின்னால், அவர், திருமதி. கிரேஸ் செரியன் மற்றும்
திருமதி. தங்கம் தாமஸ் ஆகியோருடன் இணைந்து, 1972-ஆம் ஆண்டு இந்த சிஷ்யா பள்ளியைத் துவக்கினார்.
"குழந்தைகளிடம் இருந்து குழந்தைப் பருவம் களவாடப்படக் கூடாது" என்பது திரு. தாமஸ் அவர்களுடைய சிந்தனை. இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய - உணர வேண்டிய சிந்தனை இது!
அத்தகைய சிந்தனையோடு செயல்படுவதால்தான், சிஷ்யா பள்ளியில் இருந்து ஏராளமான சாதனையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்தப் பள்ளியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பள்ளியில் என்னுடைய பெயரன், பெயர்த்தியும் கூட படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு வந்தவுடன் ஒரு எண்ணம் வந்தது. பேரனையும், பேத்தியையும் உடனே பார்த்தேன். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில், அவர்களை அடிக்கடி என்னால் பார்க்க முடியாது.
இது மாதிரி, பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடியும். அதற்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது. அதற்காக, பள்ளி நிர்வாகம் அடிக்கடி என்னை கூப்பிடக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு விடாதீர்கள். ஏனென்றால், எனக்கு இருக்கக்கூடிய பணி அப்படி. இந்தப் பள்ளியில் அவர்கள் படித்துக் கொண்டிருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய பேரப் பிள்ளைகள் மட்டுமல்ல, இந்தப் பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள் தான், என்னுடைய அன்புக்குரியவர்கள் தான், என்னுடைய பாசத்திற்குரியவர்கள்தான்.
அதனால்தான் தரமான கல்வியை நமது அரசு - இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு, பல்வேறு திட்டங்களை அதற்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
அண்மையிலே கூட, என்னுடைய பிறந்தநாள் அன்று 'நான் முதல்வன்' என்ற ஒரு திட்டத்தை நான் அறிமுகம் செய்தேன். நீங்கள் எல்லோரும் அந்தச் செய்திகளை பத்திரிகைகளிலும், மீடியாவிலும் பார்த்திருப்பீர்கள்.
Coding, Robotics போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் என்று அதைச் சொல்லலாம்!
கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை!
அந்தச் சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை, 'திராவிட மாடல்' அரசு என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
அந்த வகையில், நமது அரசின் முழக்கம்தான், இந்த சிஷ்யா பள்ளியின் முழக்கமாகவும் இருக்கிறது. அதுதான், 'Aspire and Excel' என்று நான் இங்கே குறிப்பிட்டுக் காட்டி, இந்த இனியதொரு விழாவிலே நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும்
சந்திக்கக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்த சிஷ்யா பள்ளியினுடைய நிர்வாகத்திற்கும், இங்கு பயிற்றுவித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆசிரியர் பெருமக்களுக்கும், வருகை தந்திருக்கக்கூடிய பெற்றோர் பெருமக்களுக்கும், எனது அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து, இந்த அளவோடு என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story