கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் தங்கத்தை பெற்றுக்கொள்ள மறுத்தால் நடவடிக்கை: இந்து சமய அறநிலையத்துறை
கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கை வழங்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகத்தினர் மறுத்தால் சார்நிலை அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
காணிக்கை
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பொருட்டு பக்தர்களால் மனமுவந்து காணிக்கையாக வழங்கப்படும் பொன், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த இனங்களை பல கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாகவும், சில நிர்வாகிகள் ஆணையர் அனுமதி பெற்று வர தெரிவிப்பதாகவும், மேலும் சில நிர்வாகிகள் காணிக்கை ரசீது வழங்க இயலாது எனக் கூறி உண்டியலில் செலுத்தி விடத் தெரிவிப்பதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்தவாறு உள்ளன. இதனால் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் எளிதாக பின்பற்ற வழிகாட்டி நெறிமுறையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் பொன், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த இனங்கள், பக்தர்களால் ஏற்கனவே உபயோகப்படுத்தபட்டிருந்தாலோ அல்லது பரம்பரை நகையாக இருந்தாலோ அதன் விவரம் மத்தியஸ்தர் எடை ரசீது மற்றும் காணிக்கையாக வழங்கும் பக்தரின் அடையாள அட்டை நகல் மற்றும் சம்மத கடிதம் ஆகியவற்றை ஆதாரமாகப் பெற்று கோவில் காணிக்கை பதிவேட்டில் பதிந்து கொள்ளவேண்டும்.
கடும் நடவடிக்கை
இவ்வாறு பெறப்படும் காணிக்கை பொருட்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பெறப்படும் காணிக்கை இனங்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்து ஆவணப்படுத்திட வேண்டும். கிரீடம், கவசம், விமான கலசங்கள், வெள்ளி கதவு, வெள்ளி ரதம், தங்க ரதம் போன்ற விலையுயர்ந்த இனங்களை உபயமாக பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) குழுவினரை கொண்டு சிறப்பு இனமாக மதிப்பீடு செய்து சிறப்பு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து உடன் ஆணையர் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில் கோவில்களுக்கு பக்தர்களால் காணிக்கை வழங்கப்படும் பொன், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த இனங்களைப் பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகத்தால் தகுந்த காரணங்கள் இல்லாமல் மறுப்பு தெரிவிப்பதாக புகார் ஏதேனும் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்காணும் அறிவுரைகளை தவறாது கடைப்பிடித்து இத்துறைக்கும் நற்பெயர் பெற்றுத்தரும் விதமாக செயல்பட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story