கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மேலும் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மேலும் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2022 12:12 AM IST (Updated: 6 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை:
கள்ளக்காதல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே விளானூர் பகுதியை சேர்ந்த பால்சாமியின் மனைவி பஞ்சவர்ணம் (வயது 47). இவரது கணவர் இறந்து விட்டார். பஞ்சவர்ணத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கும் (43) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் சிவக்குமார் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த பணத்தை பஞ்சவர்ணம் திருப்பி கேட்டபோது சிவக்குமார் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் அவரிடம் பணத்தை கேட்டு பஞ்சவர்ணம் பிரச்சினை செய்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் தன்னுடன் சென்னையில் ஓட்டலில் வேலை பார்த்த ஆவுடையார்கோவில் அருகே உள்ள குமுளூரை சேர்ந்த காளிமுத்து (35), மணிப்பூரை சேர்ந்த லல்லிம்பாய் (25) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கொன்று புதைப்பு
இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் தான் பழக்கம் ஏற்படுத்தி, பணத்தை பெற்றுத் தருவதாக சிவகுமாரிடம் காளிமுத்து கூறியிருக்கிறார். இதையடுத்து காளிமுத்து  பஞ்சவர்ணத்தை சந்தித்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். இருப்பினும் அவர் பணத்தை வாங்கி கொடுக்கவில்லை. 
அதற்கு மாறாக பணம் கேட்டு தொந்தரவு செய்யும் பஞ்சவர்ணத்தை காளிமுத்து, சிவகுமார், லல்லிம்பாய் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று காளிமுத்து பணத்தை வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்வதாக கூறி பஞ்சவர்ணத்தை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வடகீழ்குடி பகுதியில் ஆற்றங்கரையோரம் அழைத்து சென்றார். அங்கு பஞ்சவர்ணத்தை காளிமுத்து, சிவக்குமார், லலிம்பாய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து புதைத்தனர். 
மேலும் பஞ்சவர்ணத்திடம் இருந்த 17½ பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை  கொள்ளையடித்து சென்றனர். இதற்கிடையில் தனது தாய் பஞ்சவர்ணத்தை காணவில்லை என அவரது மகன் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது மேற்கண்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து காளிமுத்து, சிவக்குமார், லல்லிம்பாய் ஆகியோரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் காளிமுத்துவுக்கு 2 ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், லல்லிம்பாய்க்கு ஒரு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்), 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மற்றொரு பெண் கொலை வழக்கிலும்
காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை 
பஞ்சவர்ணத்தின் கொலை வழக்கில் கைதான காளிமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 6-1-2018 அன்று ஆவுடையார்கோவில் அருகே குமுளூர் கிராமத்தில் மற்றொரு காளிமுத்துவின் மனைவியான கனகம்பாளின் தலையை துண்டித்து கொலை செய்து, அவரது உடலை எரித்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் கொலையாளி காளிமுத்துவை கைது செய்தனர். நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தையை காளிமுத்து அவமானப்படுத்தியதால், அதற்கு பழி தீர்க்க காளிமுத்துவை கொலை செய்ய சென்ற இடத்தில் அவர் இல்லாததால் அவரது மனைவியான கனகம்பாளை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கும் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், சிறையில் இருக்கும் காலத்தில் 18 மாதங்களில் மாதத்தில் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.  இதனால் பஞ்சவர்ணம், கனகம்பாள் ஆகிய இரு பெண்கள் கொலை வழக்கில் ெதாடர்புைடய காளிமுத்துவுக்கு 3 ஆயுள் தண்டனையும், 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காளிமுத்து மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலா் ஆஜராகி வாதாடினாா்.


Next Story