மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு; கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்திற்கும்,கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மேகதாது அணை
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுவின் அடிப்படையில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினை தொடர்பாக தீர்வு காண காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.
இந்தநிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்போவதாக கடந்த 2012-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக அணை கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுவதால் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மேகதாது அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
மேலும் மத்திய அரசும் மேகதாது அணை கட்ட இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2 கட்டமாக நடைபயண போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மேகதாது திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2023) கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு கண்டனம்
இந்த அறிவிப்பு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முரணானது
மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு அதன் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோதே இந்த மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் முரணானது.
தீர்ப்புகளை மதிக்காமல்
5.2.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும், 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்தவிதத்திலும் நியாயமாகாது.
இந்த அறிவிப்பு, வரும் கர்நாடக அரசின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும் தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story