சசிகலாவை சந்தித்து பேசியதால் நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து அதிரடி நீக்கம்


சசிகலாவை சந்தித்து பேசியதால் நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 6 March 2022 6:46 AM IST (Updated: 6 March 2022 6:46 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவை சந்தித்து பேசியதால், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேபோல், தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களும் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,  

திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய சென்று இருந்த சசிகலாவை தேனி மாவட்ட ஆவின் தலைவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா சந்தித்து பேசினார். இதனால், அவர் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஓ.ராஜா (தேனி மாவட்ட ஆவின் தலைவர்), எஸ்.முருகேசன் (தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர்), வைகை.கருப்புஜி (தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர்), எஸ்.சேதுபதி (கூடலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்) ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய காரணங்களாலும், முருக்கோடை எம்.பி.ராமர், சி.சேரலாதன், ஜி.ஜான் போஸ்கோ, எம்.இளையராஜா, சாந்தி நாகராஜ், எம்.பரத், ஆர்.மணிகண்டன், கருப்பையா, எம்.பெத்தனசாமி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

மேலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தால், ஏ.ராமச்சந்திரன், எஸ்.தனலட்சுமி, ஆர்.தங்கராஜ், டி.கருப்பசாமி, எம்.முருகன், எஸ்.நவீன்குமார், எஸ்.அருள்மொழி, செல்வலட்சுமி அன்பழகன், கருப்பாணி, சாலைக்கரை முத்தையா, ஏ.தனபால், ஏ.ஜெயராமன், பெருமாள், எஸ்.காதர், எஸ்.சரவணன், கே.போகராஜ், எம்.கோட்டீஸ்வரன், எஸ்.சின்னக்காளை, ஆர்.ஜெயப்பிரகாஷ், எஸ்.முத்தையா, சீனி நாயுடு, ஆர்.விமல்ராஜ், எம்.மாயாண்டி ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story