தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்
தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இன்று காலையில் உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் இருங்காட்டுக் கோட்டையில் இருந்து திருமழிசை வெள்ளவேடு, அரண்வாயில் வழியாக மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.
அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள ஒரு கடையில் கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது.
தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிற்று கிழமைகளில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருவதாகவும், உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடியும் எனவே நான்கு மணி நேரம் சைக்கிளிங் செய்வது அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.
மேலும் சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story