18 புதுவை மாணவர்கள் நாடு திரும்பினர்
உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 18 புதுவை மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 18 புதுவை மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
உக்ரைன் போர்
போர் நடைபெற்று வரும் உக்ரைனில் புதுச்சேரியை சேர்ந்த 27 மாணவ-மாணவிகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி உக்ரைனில் சிக்கித்தவித்த புதுவை மாணவ-மாணவிகளை மீட்க பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
அதன்படி கடந்த வாரம் புதுச்சேரியை சேர்ந்த மருத்துவ மாணவி ரோஜா சிவமணி உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு, புதுச்சேரி திரும்பினார். இதை தொடர்ந்து மற்ற மாணவர்களையும் மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது.
18 மாணவர்கள் திரும்பினர்
இந்தநிலையில் உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்கள் போலந்து நாடு வழியாக நேற்று முன்தினம் தாயகம் திரும்பினர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 18 மாணவ- மாணவிகள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் விவரம் வருமாறு;-
ராஜசங்கரி, சம்பவர்தினி, ராஜேஷ், மலர்விழி, நிதேஷ்குமார், டேனியல், பர்தின், அரவிந்தன், இளம்கதிர், ஆர்த்தி, சிவசங்கரி, மாதேஷ், சேஷவர்த்தன், வினோதினி, விஷாலினி, அக்ஷயா, அக்ஷய், மதன்ராஜ். இவர்களில் 13 பேர் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, நேற்று புதுச்சேரிக்கு வந்தடைந்தனர். 5 பேர் டெல்லியில் உள்ள புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (திங்கட்கிழமை) புதுவை திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனில் சிக்கியுள்ள மேலும் 8 மாணவ-மாணவிகளை மீட்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைச்சர் வாழ்த்து
போர் முனையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு புதுவை திரும்பிய மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். புதுவை திரும்பிய மாணவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
உக்ரைனில் இருந்து காரைக்கால் வந்த மருத்துவ மாணவி சிவசங்கரியை அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் தனித்தனியே சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story