திருப்பூர் அடகு கடையில் 3¼ கிலோ நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது


திருப்பூர் அடகு கடையில் 3¼ கிலோ நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 March 2022 1:53 AM IST (Updated: 7 March 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நகை அடகு கடையில் 3¼ கிலோ நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய வடமாநில வாலிபர்களை ஓடும் ரெயிலில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கே.பி.என். காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 49). இவர் தனது வீட்டின் முன் புறம் நகை அடகு கடை நடத்தி வருகிறார். வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடந்த சில மாதங்களாக என்.ஆர்.கே. புரத்தில் உள்ள வீட்டில் ஜெயக்குமார் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு கே.பி.என். காலனியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் பின்புற இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை அடகு கடையில் இருந்த 3¼ கிலோ தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை அள்ளிக் கொண்டு தப்பிவிட்டனர்.

பீகார் ரெயிலில் தப்பினர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். நகை அடகு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், காட்சிகளை பதிவு செய்யும் கருவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்கினர்.

அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ரெயிலில் ஏறி தப்பியதும் கண்டறியப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட 4 கொள்ளையர்கள் ஏறிச்சென்ற ரெயில் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த 4 கொள்ளையர்களும் திரிபுரா செல்லும் பாகமதி ரெயிலில் ஏறி தப்பியது தெரியவந்தது. உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ரெயிலில் சோதனையிட உத்தரவிடப்பட்டது.

4 பேரை பிடித்தனர்

இந்த நிலையில் அந்த ரெயில் மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டம் பல்லார்பூர் அருகே சென்றபோது பல்லார்ஷா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயிலில் சென்ற கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். பல்லார்ஷா ரெயில் நிலையத்தில் வைத்து அந்த ரெயிலை நிறுத்தி 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனையிட்டபோது அதில் 3¼ கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, ரூ.15 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்தாப் ஆலம் (37), முகம்மது சுபான் (30), ஜோஹிகாட் ஆராரியா பகுதியைச் சேர்ந்த பத்ரூல் (20), திலகாஸ் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் திருப்பூரில் உள்ள நகை அடகு கடையில் இருந்து கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

தனிப்படையினரிடம் ஒப்படைப்பு

இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீசாருக்கு, ரெயில்வே பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

பல்லார்ஷா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொள்ளையர்கள் 4 பேரையும் கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் நான்கு பேரையும் நேற்று திருப்பூர் மாநகர தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையர்களுடன் தனிப்படை போலீசார் ரெயில் மூலமாக நேற்று மாலை திருப்பூர் புறப்பட்டார்கள். இன்று (திங்கட்கிழமை) இரவு திருப்பூர் வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story