கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக எம்.எல்.ஏ. தி.மு.க.வில் இருந்து நீக்கம்


கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக எம்.எல்.ஏ. தி.மு.க.வில் இருந்து  நீக்கம்
x
தினத்தந்தி 7 March 2022 5:34 AM IST (Updated: 7 March 2022 6:05 AM IST)
t-max-icont-min-icon

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

கடலூர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து மேயர் வேட்பாளராக 20-வது வார்டில் வெற்றி பெற்ற சுந்தரியை தி.மு.க. தலைமை அறிவித்தது. அதேநேரத்தில் கடலூர் மாநகராட்சியின் 2-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரனும் மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதனால் கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலரும் மாயமாகினர். தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக மாற்று வேட்பாளரை தி.மு.க. எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் நிறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோ.அய்யப்பன் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குமாறு கடலூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கட்சியில் இருந்து நீக்கம்

இந்த தேர்தலில் தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி 19 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட கீதா 12 வாக்குகள் பெற்றார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக மாற்று வேட்பாளரை மறைமுகமாக நிறுத்தி தி.மு.க.வின் வெற்றியை தடுக்க பார்த்ததாக கோ.அய்யப்பன் எம்.எல்.ஏ. மீது கட்சி தலைமைக்கு புகார்கள் பறந்தன.

இதைத்தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியிடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பல இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களை பதவி விலகுமாறும், தன்னை வந்து சந்திக்குமாறும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிரணி நிர்வாகி நீக்கம்

இதேபோல் கோவை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மீனா ஜெயக்குமார் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, தனக்கு தேர்தலில் இடம் கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மீது குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

மதுரை மாவட்ட நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து தனது மருமகளை போட்டியிட வைத்த திருமங்கலம் நகர தி.மு.க. பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தனது ஆதரவாளரை களம் இறங்கிய உசிலம்பட்டி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி ஆகியோரும் தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போன்று மறைமுக தேர்தலின் போது தி.மு.க. தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்ட உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் இ.சுதந்திரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் மொ.சந்திரன், வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் மற்றும் எஸ்.எம்.பஷீர் அகமது ஆகியோரையும் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Next Story