ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 8 March 2022 4:33 AM IST (Updated: 8 March 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. ‘இன்னும் என்ன ஆகுமோ?’ என பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னை,

தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வப்போது ஏற்றத்தாழ்வை சந்திக்கும். ஆனால் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. ‘கிடுகிடு’வென உயர்ந்து வரும் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை (பவுன்) எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற வல்லுனர்களின் ஆரூடம் பலித்திருக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.4,970-க்கும், பவுன் ரூ.39,760-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ.5,071-க்கும், பவுனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.75.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.75,700-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்தநிலையில் ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம் விலை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

மக்கள் கலக்கம்

தங்கம் விலை குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகையில், ‘‘ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக பங்குச்சந்தை கடும் சரிவில் இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கவனமும் தங்கத்தின் மீதே இருக்கிறது. எனவே போர் நீளும் பட்சத்தில் தங்கம் விலை இன்னும் புதிய உச்சத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’, என்றார்.

தங்கம் மீதான விலையேற்றம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் என்ன ஆகப்போகிறதோ... என்று மக்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

Next Story