புதுக்கோட்டையில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நில மோசடி பெண் சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு


புதுக்கோட்டையில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நில மோசடி பெண் சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 March 2022 12:09 AM IST (Updated: 9 March 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நில மோசடியில் பெண் சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
ரூ.1 கோடி நிலம் மோசடி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவர் சுப்பையா என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தையும் மற்றும் 2 பேரிடம் இருந்து 66 சென்ட் நிலத்தையும் கடந்த 2011-ம் ஆண்டு வாங்கினாா். சுப்பையா தனது நிலத்தை விற்பதற்கு முன்பு நார்த்தாமலையை சேர்ந்த வேலுசாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோருக்கு நிலத்தில் பவர் பத்திரம் கடந்த 18-3-2004 அன்று போட்டு கொடுத்துள்ளார். அதன்பின் அந்த பவரை 23-6-2004 அன்று சுப்பையா ரத்து செய்தார். 
இந்த நிலையில் சுப்பையாவிடம் இருந்து முனுசாமி வாங்கிய ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை வேலுசாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நஸ்முதீன், முகமது தைபு ஆகியோருக்கு விற்றுள்ளனர். இதற்கு புதுக்கோட்டை இணை பதிவாளர் அலுவலகத்தில் அப்போது பணியாற்றிய பெண் சார் பதிவாளர் தமிழ்மணி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 
6 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நில மோசடி தொடர்பாக புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் முனுசாமி புகார் அளித்தார். அதன்பேரில் வேலுசாமி, சந்திரசேகரன், சோமசுந்தரம், முகமது நஸ்முதீன், முகமது தைபு, சார் பதிவாளர் தமிழ்மணி ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘வேலுசாமி, சோமசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பவர் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அது தெரிந்திருந்தும் அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அவர்கள் விற்ற போது சார் பதிவாளர் தடுக்காமல் செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர். போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனைக்கு சார் பதிவாளரே உடந்தையாக இருந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story