தமிழக காவல்துறையில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்


தமிழக காவல்துறையில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்
x
தினத்தந்தி 9 March 2022 12:25 AM IST (Updated: 9 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழக காவல்துறையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சிறப்பாக பணிபுரிகிறார்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் போலீஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கேக் வெட்டினார்கள். பெண் போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், அவரது மனைவி மம்தா ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற பெண் ஊழியர்கள் மற்றும் பெண் போலீசாருக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கூடுதல் கமிஷனர்கள் லோகநாதன், தேன்மொழி, டாக்டர் கண்ணன், செந்தில்குமார், இணை கமிஷனர்கள் சாமுண்டீஸ்வரி, ரம்யா பாரதி, ராஜேஸ்வரி, பிரபாகரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலவச மருத்துவ முகாம்

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மனைவிமார்கள் சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் பெண் போலீசாருக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரது மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மனைவிமார்கள் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சைலேந்திரபாபு பேச்சு

விழாவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில் கூறியதாவது:-

தமிழக காவல்துறையில் 23 ஆயிரம் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பணி செய்கிறார்கள். அவர்கள் ஆண்களுக்கு இணையாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள். முக்கிய பொறுப்புகளில் பெண் அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

லத்திகாசரண் சென்னை போலீஸ் கமிஷனராகவும், டி.ஜி.பி.யாகவும் பணியாற்றி உள்ளார். வசந்தகுமாரி, சரஸ்வதி போன்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரோல் மாடல் அதிகாரிகளாக பணியில் சிறந்து விளங்கினார்கள். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தன்னந்தனியாக சென்று ரவுடிகளை பிடித்து வருவார். அவருக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி பெண் அதிகாரிகளின் சிறப்பான பணியை உதாரணமாக சொல்லலாம். பெண் அதிகாரிகள் தங்களது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story