உலக மகளிர் தினம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளை பெண்களே இயக்கி சாதனை


உலக மகளிர் தினம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளை பெண்களே இயக்கி சாதனை
x
தினத்தந்தி 9 March 2022 2:58 AM IST (Updated: 9 March 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உள்ள 6 வகையான கட்டுப்பாட்டு அறைகளை முழுக்க முழுக்க பெண்களே இயக்கி, 274 விமானங்களை கையாண்டு சாதனை படைத்தனர்.

ஆலந்தூர்,

மகளிர் தினத்தையொட்டி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தென் மண்டல விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் விமானங்கள் புறப்படுவது, வானில் பறப்பது, தரை இறங்குவது உள்பட கட்டுப்பாட்டு அறைகளில் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே நேற்று ஈடுபட்டனா்.

இவ்வாறு அனைத்து பணிகளும் முழுக்க முழுக்க பெண்களை கொண்டு செயல்படுத்தப்பட்டன.

கட்டுப்பாட்டு அறைகள்

விமானங்கள் பத்திரமாக பாதுகாப்புடன் புறப்படுவது, வானில் பறப்பது, தரை இறங்குவது ஆகியவற்றுக்கு இந்த 6 வகை கட்டுப்பாட்டு அறைகள் மிக மிக முக்கியமானது. சென்னை விமான நிலையத்தில் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பிரிவுகளில் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இதில் 287 பேர் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆவார்கள்.

உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் அனைத்து பணிகளையும் இந்த 6 கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள 287 பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் சுழற்சி முறையில் பணியாற்றினார்கள்.

274 விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு, வருகை, 32 பன்னாட்டு விமானங்களின் புறப்பாடு, வருகை, 18 தனி விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் புறப்பாடு, வருகை மொத்தம் 274 விமானங்களை பத்திரமாக பாதுகாப்பான முறையில் கையாண்டு பெண்கள் சாதனை படைத்தனா்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் இருந்து சென்னை வந்தார். இந்த விமானத்தை இறக்குவதிலும் பெண் அதிகாரிகள், ஊழியர்கள் திறம்பட செயல்பட்டனர். சென்னை விமான நிலையம் முழுவதும் பெண் ஊழியா்கள், அதிகாரிகளால் செயல்பட்டது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

சாதனை

இது பற்றி தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையக நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் கூறும்போது, “மகளிர் தினத்தில் பெண்களை கவுரவப்படுத்த வேண்டும் என்று இந்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனை” என்றார்.

விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் பரிமாற்ற அறை பொது மேலாளர்கள் முத்து, முருகானந்தன் ஆகியோர் கூறும்போது, “நாங்கள் சோதனை அடிப்படையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் இது மிகப்பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது” என்றனர்.

நினைவு பரிசு

விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரி உமா கூறும்போது, “உலக மகளிர் தினம் என்பதால் பெண்கள் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. துணை ஜனாதிபதி விமானத்தை தரை இறங்க அனுமதி வழங்கியது சிறப்பானதாக இருந்தது” என்றார்.

Next Story