அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க தனிக்குழு அமைக்கக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி


அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க தனிக்குழு அமைக்கக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 9 March 2022 12:21 PM IST (Updated: 9 March 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை மீட்க தனிக்குழு அமைக்கக் கோரி தொரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க சென்ற போது வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு புராதண சிலைகள் அங்கு இருந்தாக கூறியுள்ளார். 

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அந்த அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலை திருடப்பட்டுள்ளதால், இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி சிலைகளை மீட்க, இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இதே மனுதாரர் தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் என்றும் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு சிறப்பு அதிகாரியை நியமித்து சிலை கடத்தல் வழக்குகளை உத்தரவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளதாகவும், மனுதாரர் இந்த விவரங்களை தனது மனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதே சமயம் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story