ஓட்டல் அதிபர் ராஜகோபால் தொடர்பான வழக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன


ஓட்டல் அதிபர் ராஜகோபால் தொடர்பான வழக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன
x
தினத்தந்தி 10 March 2022 3:40 AM IST (Updated: 10 March 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் அதிபர் ராஜகோபால் தொடர்பான வழக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஜீவஜோதி பரபரப்பு புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கொடுத்துள்ளார்.

சென்னை,

நான் தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். எனது முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த 2001-ம் ஆண்டு கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபால் குற்றவாளி என்று கீழ்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. நான் தற்போது தண்டபாணி என்பவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் யூடியூப் செய்தி சேனல் ஒன்றில் தடா ரஹீம் என்பவர், ஓட்டல் அதிபர் ராஜகோபால் சிறையில் இருக்கும்போது தன்னிடம் சொன்னதாக ஒரு தவறான தகவலை கூறியுள்ளார்.

எனக்கும், ராஜகோபாலுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அந்த நிலையில் நான் பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்ததாகவும் தடா ரஹீம் தவறான தகவலை கூறியுள்ளார். நானும், ராஜகோபாலும் அறிவிக்கப்படாத கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும் தடா ரஹீம் குறிப்பிட்டுள்ளார். இது உண்மைக்கு புறம்பான தகவல்.

சட்டப்படி நடவடிக்கை

அவர் கூறிய இந்த தகவல் எனது பெண்மைக்கும், நடத்தைக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. தடா ரஹீம் மீதும், என்னை பற்றி தவறான தகவல்களை வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அதிபர் ராஜகோபால் இறந்துவிட்டார் என்பதும், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story