மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 March 2022 5:32 AM IST (Updated: 10 March 2022 5:32 AM IST)
t-max-icont-min-icon

‘மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’, என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக 2016-ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், தி.மு.க.வினால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் ‘டாஸ்மாக்’ மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும், ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்களை அமைக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மது விற்பனை மூலம் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று 2016-ம் ஆண்டு கூறிய தி.மு.க., இப்போது அந்த புதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதற்கு காரணம் தி.மு.க.விடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட ஒரு வாக்குறுதி. இதை தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

தி.மு.க.வின் இரட்டை வேடம்

2020-21-ம் ஆண்டில் ரூ.33,811 கோடியாக இருந்த மது விற்பனை மூலமான வருவாய், 2021-22-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடியை தாண்டும் என்ற நிலையில், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை குறைந்தபட்சம் ரூ.10-ல் இருந்து அதிகபட்சம் ரூ.80 வரை உயர்த்தி இருக்கிறது. இதன்மூலம் 2022-23-ம் ஆண்டில் ‘டாஸ்மாக்’ மூலம் வரும் வரி வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியை தாண்டக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக, 5 ஆண்டுகளுக்கு முன் ‘பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று கூறிய தி.மு.க., சென்ற ஆண்டு பொதுத்தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கண்ட இரண்டில் எதையும் செய்யாமல், மதுபானக்கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டி இருக்கிறது.

மது ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது வற்புறுத்தியவர் மு.க. ஸ்டாலின். இதை அவர் மறந்துவிட்டார்.

நடவடிக்கை வேண்டும்

எனவே தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவும், ‘டாஸ்மாக்‘ கடைகளுக்கு அருகேயுள்ள ‘பார்’களை மூடவேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தவும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story