நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை...!


நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை...!
x
தினத்தந்தி 10 March 2022 4:45 PM IST (Updated: 10 March 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் வைகுண்டம் நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் ஸ்கூட்டரில் குளிக்கச் சென்றார். பின்னர் ஸ்கூட்டரை கரையில் நிறுத்தி விட்டு துணிகளைக் கழற்றி வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வைகுண்டத்தின் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டியது. வைகுண்டம் சுதாரித்து தடுப்பதற்குள் அந்த கும்பல் வைகுண்டத்தின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. 

இதில் பலத்த காயம் அடைந்த வைகுண்டம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) டி.பி.சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரி ராஜ், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைகுண்டத்தின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வைகுண்டத்திற்கு மாரித்தாய் என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story