சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதி: நெடுஞ்சாலையில் அனுமதி - கலெக்டர் அறிக்கை தாக்கல்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதி நெடுஞ்சாலையில் உள்ளூர் மக்களுக்கு அனுமதி அளிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
பவானி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இது இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது உண்டு. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்தன.
இதை கருத்தில் கொண்டு திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில், உள்ளூர் மக்களை எந்த நேரக்கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:-
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில், உள்ளூர் மக்களை எந்த நேரக்கட்டுப்பாடு இன்றி அனுமதிக்கலாம். உள்ளூர் மக்கள் உரிய ஆதாரங்களை சரிபார்த்து நேரக்கட்டுப்பாடின்றி பயணிக்க அனுமதிக்கலாம்.
மருத்துவ அவசர, பொதுபோக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம், அதை தவிர்த்து பிற கனரக வாகனங்களுக்கு இரவு நேர தடை விதிக்கலாம். 6 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story