நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரபலம் வென்றுள்ளது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரபலம் வென்றுள்ளது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 March 2022 12:42 AM IST (Updated: 11 March 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரபலம் வென்றுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

‘‘மக்களை பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்’’ என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான வகையில், ஆளுகிறவர்களை பார்த்து மக்கள் மட்டும் அல்ல, அரசு அதிகாரிகளே அஞ்சக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

‘ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறுபதம்' என்பதற்கேற்ப ஒரு உள்ளாட்சி தேர்தல் தில்லுமுல்லு சம்பவம் நடைபெற்று, அது சென்னை ஐகோர்ட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 10-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பின்னர் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

கண்டனம்

இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சுயேச்சை வேட்பாளரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த முதல் அமர்வு குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை பார்வையிட்டுவிட்டு, முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்ததுடன், தொடர்புடைய தேர்தல் அதிகாரி கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனையடுத்து கோர்ட்டில் ஆஜரான தேர்தல் அதிகாரி, தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார். ஓர் அரசு அதிகாரியே தி.மு.க.வினரால் மிரட்டப்படுகிறார் என்றால், சாதாரண வேட்பாளர்கள் எம்மாத்திரம் தி.மு.க.வினரின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அதிகாரபலம் வென்றுள்ளது

இந்தநிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர், தகுந்த ஆதாரத்துடன், சாதுர்யமாக கோர்ட்டை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோல வாக்குப்பதிவிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், படைபலம், அதிகாரபலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் தக்கப்பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story