குமரியை சேர்ந்தவர்கள் உள்பட செஷல்ஸ் தீவில் மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிப்பு


குமரியை சேர்ந்தவர்கள் உள்பட செஷல்ஸ் தீவில் மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 March 2022 1:17 AM IST (Updated: 11 March 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

செஷல்ஸ் தீவில் குமரியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி,

செஷல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் 21 பேர் உள்பட 33 பேரை அங்குள்ள கடற்படையினர் கடந்த 7-ந்தேதி சிறைபிடித்தனர். இதேபோல் அந்தமான் தீவில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரியை சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 8 பேர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குமரி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் சில மீனவர்கள் செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 25 பேர் சிறைபிடிப்பு

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த 2 விசைப்படகுகளில் குமரியை சேர்ந்தவர்கள் உள்பட 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் காலையில் 25 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி செஷல்ஸ் தீவு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இதில் படகுகளுக்கு சொந்தமான 2 பேரை மட்டும் கைது செய்தனர். மற்ற 23 பேரையும் விசைப்படகுகளிலேயே சிறை வைத்துள்ளனர். அதே சமயத்தில் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

அதன்படி இதுவரை குமரியை சேர்ந்தவர்களின் 5 விசைப்படகுகளில் சென்ற 58 மீனவர்கள் செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே செஷல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story