“தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியே இனி கிடையாது” அண்ணாமலை உற்சாக பேட்டி


“தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியே இனி கிடையாது” அண்ணாமலை உற்சாக பேட்டி
x
தினத்தந்தி 11 March 2022 3:42 AM IST (Updated: 11 March 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

4 மாநில தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றியை, சென்னை கமலாலயத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, “தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியே இனி கிடையாது” என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

இதனால் தமிழகத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வினர் நேற்று திரண்டனர். தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக கமலாலயத்தில் பெரிய திரையில் தேர்தல் முடிவுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தொண்டர்கள் கொண்டாடினர். அப்போது கமலாலயம் வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு, கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மாநிலத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வர்த்தகரணி துணை செயலாளர் சி.ராஜா மற்றும் மகளிரணி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பா.ஜ.க. அலுவலகமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தி கிடையாது

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறுபடியும் ஒருமுறை நமது நாடு ஒருமித்த குரலில் ‘நரேந்திரமோடியுடன் நாங்கள் என்றும் பயணிப்போம்’ என்ற உறுதியான வார்த்தையை பதிவு செய்திருக்கிறது. இந்த 4 மாநில தேர்தல் வெற்றிக்கும் மிகவும் முக்கியமான காரணம், பிரதமர் நரேந்திரமோடி தான். மலிவு அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியே இனி கிடையாது.

இது தமிழகத்திலும் இனி நிகழும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது 2024-ம் ஆண்டிலா அல்லது 2026-ம் ஆண்டிலா என்பது தெரியாது. ஏனெனில் ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது’ என தலைமை தேர்தல் கமிஷனர் கூறியிருக்கிறார். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களின் அன்பை பெற்று ஆட்சியில் அமர பா.ஜ.க. தயாராக இருக்கிறது. வரும் காலம் அதற்கு பதில் சொல்லும்.

பா.ஜ.க. மீது மக்கள் அன்பு

உத்தரபிரதேசத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது என்றார்கள். எந்த அலையும் வீசவில்லை. கும்மிடிப்பூண்டி வரை மட்டும் தான் அந்த அலை இருக்கும். வருகிற காலத்தில் மு.க.ஸ்டாலின் போக்கில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசுடன் இணைந்து பயணித்து, அதன் மூலமாக மத்திய அரசின் பலன்களை மக்களுக்கு அளிப்பார் என்று நம்புகிறோம்.

2024-ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றிபெறும். மோடி மறுபடியும் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே தமிழக மக்கள் தங்கள் அன்பை நிச்சயம் மோடிக்கு அளித்து, நமது எம்.பி.க்கள் அமைச்சரவையில் மந்திரிகளாக அமர்ந்து மக்கள் பணியாற்றுவார்கள். மக்கள் பா.ஜ.க. மீது அன்பை செலுத்த தயாராகிவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story