ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு ரத்து
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து,வழக்கு விசாரணையில் ஒரு முதல்-அமைச்சர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக முதல்-அமைச்சரை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராவதில் இருந்து சென்னை ஐகொர்ட்டு விலக்கு அளித்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story