‘நீதியை நிலைநாட்ட கோர்ட்டு எந்த எல்லைக்கும் செல்லும்’ ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


‘நீதியை நிலைநாட்ட கோர்ட்டு எந்த எல்லைக்கும் செல்லும்’ ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 12 March 2022 1:25 AM IST (Updated: 12 March 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் தொடர்ச்சியாக எழும் பாலியல் புகார்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது என்றும், இந்த விஷயத்தில் நீதியை நிலைநாட்ட கோர்ட்டு எந்த எல்லைக்கும் செல்லும் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.

மதுரை,

மதுரை முனிச்சாலையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பள்ளியில் பணியாற்றிய 2 ஆசிரியைகளின் தற்காலிகமாக இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள் புகார் அளித்ததன் அடிப்படையிலேயே அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் தரப்பிலும் உரிய பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

எந்த எல்லைக்கும் செல்லும்

இந்த வழக்கில் மனுதாரர் 2 ஆசிரியைகளை பணியமர்த்துமாறு கோராமல், பணி மாறுதல் செய்யப்பட்ட 2 பேரின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளை இந்த கோர்ட்டு பொறுத்துக்கொள்ளாது. கல்வி நிறுவனங்களில் இதுபோல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதை கண்டு இந்த கோர்ட்டு அதிர்ச்சி அடைகிறது. உரிய நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற நபர்கள், நீதியின் பார்வையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நீதியை நிலைநாட்ட கோர்ட்டு எந்த எல்லைக்கும் செல்லும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆகவே, 2 ஆசிரியைகளும் அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில் கீரைத்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை சம்பந்தப்பட்டவர்களின் பணி பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர் தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கின் ஆவணங்களை கீரைத்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story