கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்


கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 12 March 2022 3:17 AM IST (Updated: 12 March 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது, தன் மருமகனுக்கு ஆதரவாக ஜெயக்குமார் செயல்பட்டு, கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரித்து கொண்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த ஜெயக்குமாரின் மனுவை செங்கல்பட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஜாமீன் கூடாது

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயக்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன், வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், புகார்தாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆகியோர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

திருச்சியில் தங்கியிருக்க வேண்டும்

அந்த உத்தரவில், ‘‘இந்த வழக்கின் குற்ற சம்பவம் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடைந்ததாக கூறப்படவில்லை. இந்த வழக்கின் புகார் 2021-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, போலீசார் கடந்த மாதம் 24-ந்தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, ரூ.10 ஆயிரம், இருநபர் உத்தரவாதம் அளித்து கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், திருச்சியில் தங்கியிருந்து வாரத்தில் 3 நாட்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story