காவலாளியின் கையை கடித்த பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு


காவலாளியின் கையை கடித்த பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 March 2022 11:40 AM IST (Updated: 12 March 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

காவலாளியின் கையை கடித்த பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தின் எதிரில் தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பாலகுமார் (வயது 26) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக கண்காணிப்பாளர் அறைக்கு சென்று அவருக்கு விடுமுறை வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. 

அப்போது அந்த அலுவலக கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த்துக்கும் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரியான ராதிகா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்ட பாலகுமார் அவர்களின் தகராறை விலக்க முயன்றார்.


 இதனிடையே விஜய் ஆனந்த் பாலகுமாரிடம் செல்போனை கொடுத்து அங்கு நடைபெறும் தகராறை வீடியோ பதிவு செய்ய கூறியுள்ளார். இதனைப் பார்த்த ராதிகா காவலாளியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றார். அப்போது அவரால் செல்போனை பறிக்க முடியாததால் காவலாளியின் கையை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த  பாலகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் ராதிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story