பொன்விழா கொண்டாட இருக்கும் நிலையில் அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடியில் சீரமைப்பு
பொன்விழா கொண்டாட இருக்கும் நிலையில் அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடி மதிப்பில் சீரமைத்து அழகுப்படுத்தப்பட உள்ளது. தூண்களில் அண்ணாவின் பொன்மொழி வாசகங்களும் சிற்பங்களும் அமைக்கப்படுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
அண்ணா மேம்பாலம்
சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணா சாலை 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தலைமைச்செயலகம் முதல் கிண்டி வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சாலை அமைந்திருக்கிறது. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை - ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் ஒன்றை கட்ட கடந்த 1971-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 250 அடி நீளம் 48 அடி அகலத்தில் பிரமாண்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 21 மாதத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த மேம்பாலத்திற்கு அண்ணாவின் பெயரை அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி சூட்டினார்.
சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் இந்திய அளவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இந்தியாவிலேயே நீண்ட மேம்பாலம் என்று பல்வேறு சாதனைகளை கொண்டது அண்ணா மேம்பாலம். இதன் அருகில் குதிரைப் பந்தயத்தை தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையை அடக்கும் மனிதனின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இன்றைக்கு சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டாலும் கடந்த 50 ஆண்டுகளாக இந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கையாண்டு வரும் அண்ணா மேம்பாலத்தின் பொன்விழா ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் சென்னையின் பாரம்பரிய அடையாளமாக உள்ள அண்ணா மேம்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
ரூ.9 கோடியில் அழகுபடுத்துதல் மறுசீரமைப்பு
சென்னையின் சின்னமான அண்ணா மேம்பாலத்தை திராவிட இயக்கத்தின் அனைத்திற்கும் நிற்கும் சாட்சியாக மாற இருக்கிறது. இந்த சீரமைப்பு பணிக்காக தமிழக அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ‘மேம்பாலம் அழகுபடுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு’ கடந்த 1971-ம் ஆண்டு நடந்த அடிக்கல் நாட்டு திட்டத்தின் 50-வது ஆண்டைக் குறிக்கும்.
மேம்பாலத்தில் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழி வாசகங்களான “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” மற்றும் மாநில கலாசாரம் இறையாண்மை சுயாட்சி மற்றும் மேம்பாடு குறித்த மேற்கோள்களுடன் 32 பித்தளைப் பலகைகள் அமைக்கப்பட உள்ளது. பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடியில் சிங்க சிலை கதீட்ரல் ரோடு-அண்ணா மேம்பாலம் சந்திப்பில் உள்ள முக்கோண போக்குவரத்து தீவிலும் நுங்கம்பாக்கம் உயர் சாலை-அண்ணா மேம்பாலம் சந்திப்பு இடத்திலும் நிறுவப்பட இருக்கிறது. மேம்பாலத்தில் உள்ள எட்டு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் அழகிய தோற்றத்தை உருவாக்கும் வகையில் கல் தூண்கள் நிறுவப்படுகிறது. அத்துடன் 2 தகடுகளின் மேல் ஒரு சுடர் வடிவ கலைப்படைப்பு ஒன்றும் வைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் அசல் அஸ்திவாரக்கல் தெரியும் வகையில் அமைக்கப்படுகிறது. அதேபோல் சாம்பல் வண்ணப்பூச்சுடன் யானை சிலை ஒன்றும் வைக்கப்படுகிறது.
திராவிட அரசியலின் அடையாளங்கள்
செம்மொழிப் பூங்கா அருகில் உள்ள பாலத்தை ஒட்டிய திறந்தவெளி விளையாட்டுப் பகுதி புதுப்பிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்களுடன் 4 கல் சிற்பங்கள் நிறுவப்பட உள்ளது. பூங்கா பகுதிக்குள் இருக்கும் பெரியார் சிலையும் 5 அடி உயர்த்தப்படுகிறது. மேம்பாலத்தில் அமைக்கப்படும் கலை மற்றும் சிற்பங்கள் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலவையாக இருக்கும்.
மேம்பாலத்தின் 80 மீட்டர் தூரம் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள இடத்தில் சிற்பங்கள் மற்றும் நிலப்பரப்பு போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும். மேம்பாலத்தை பழைய புகழுக்கு மீட்டெடுக்கவும் தமிழ் நாகரீகத்தை உயர்த்தவும் சிற்பம் மற்றும் ஓவியங்கள் மூலம் திராவிட அரசியலின் அடையாளங்களை மீண்டும் உருவாக்கப்பட உள்ளது. பணிகள் தொடங்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் 3 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story