கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்


கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்
x
தினத்தந்தி 13 March 2022 3:19 AM IST (Updated: 13 March 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பான பராமரிப்பு ஆகியவற்றுக்காக கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. அதை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாவட்ட கலெக்டர்களுக்கு விருதுகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 3 நாட்களாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

முதல்-அமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து, குறை தீர்வு நடவடிக்கை மேற்கொண்டதற்காக, திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான பணி

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, சிவகங்கை மாவட்ட கலெக்டர் பி.மதுசூதனன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, முதல் பரிசு திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், 2-வது பரிசு தேனி மாவட்டத்துக்கும், 3-வது பரிசு நாமக்கல் மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தொடர்பான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, ராமநாதபுரம் கலெக்டர் சங்கர் லால் குமாவத் (முதல் இடம்), கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எம்.அரவிந்த் (2-வது இடம்), திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (3-வது இடம்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

நீலக்கொடி சான்றிதழ்

சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்காக, கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.பிரபு சங்கர் (முதல் இடம்), கோவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் (2-வது இடம்), தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.செந்தில்ராஜ் (3-வது இடம்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அமைப்பான ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை அமைப்பின் மூலம் நீலக்கொடி திட்டத்தின்கீழ், டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை மூலம் பெறப்பட்ட உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையை சுத்தமான, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான நீலக்கொடி கடற்கரையாக பராமரிப்பு செய்ததற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story