தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தையும் பார்வையிட்டார்.
சரசுவதி மகால் நூலகம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர் மதியம் 3 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதி மகால் நூலகத்துக்கு சென்றார்.
அங்கு சென்ற கவர்னரை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, நூலகத்தின் ஆயுட்கால உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சை இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
ஓலைச்சுவடிகள்- பழங்கால நூல்கள்
கவர்னர் ஆர்.என்.ரவி, சரசுவதி மகால் நூலகத்தில் இருந்த ஓலைச்சுவடிகள், பழங்கால நூல்கள் மற்றும் அவற்றை கணினி மயமாக்கும் பணிகளையும், அரியவகை புகைப்படங்கள், சிலைகள், பொருட்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து 1888-ம் ஆண்டு வரையப்பட்ட இந்திய வரைபடம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் ஒளி-ஒலி காட்சியை பார்வையிட்டார். கவர்னருடன் அவருடைய மனைவி லட்சுமியும் உடனிருந்தார்.
பெரிய கோவிலில் சாமி தரிசனம்
தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வேட்டி-சட்டையில் சென்ற கவர்னருக்கு கோவிலின் நுழைவு வாயிலில், கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உள்ளே சென்ற கவர்னர் முதலில் வராகி அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து பெருவுடையார் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். அதன் பின்னர் விமான கோபுரத்தில் உள்பகுதியில் உள்ள சோழர்கால அரிய ஓவியங்களையும், கோவில் சிறப்பம்சங்கள், கல்வெட்டுகளையும் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து பெரியநாயகி அம்மன் மற்றும் நந்தியெம்பெருமானை வழிபட்ட கவர்னர் அங்கிருந்து காரில் தஞ்சை சுற்றுலா மாளிகை வந்தார். இரவு அங்கு தங்கினார்.
பாடசாலை அடிக்கல் நாட்டு விழாவில்
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சையில் இருந்து காரில் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவிலுக்கு சென்று அங்கு விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து தஞ்சை வரும் கவர்னர், மாலையில் தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவில் பங்கேற்கிறார்.
இரவு தஞ்சையில் ஓய்வெடுத்துவிட்டு நாளை(திங்கட்கிழமை) காலை தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
Related Tags :
Next Story