ஆம்புலன்சில் போதை பொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது


ஆம்புலன்சில் போதை பொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2022 3:44 AM IST (Updated: 13 March 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து குன்னூருக்கு ஆம்புலன்சில் போதை பொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றதால் சிக்கினர்.

ஆம்புலன்ஸ்

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாநில, பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கக்கனல்லா சோதனைச்சாவடியை நோக்கி சைரன் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தது. போலீசார் சோதனை செய்ய நிறுத்திய போது, டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தாமல் அதிவேகமாக வந்து உள்ளார்.

இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலைகுந்தா சோதனைச்சாவடியில் போலீசார் நிறுத்தியும் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. இதையடுத்து ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசார் ஊட்டி-கூடலூர் சாலை ஹில்பங்க் பகுதியில் வேகமாக வந்த ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

போதை பொருட்கள் கடத்தல்

அப்போது ஆம்புலன்சில் இருந்த 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசார் ஆம்புலன்சை சோதனை செய்தனர். இதில், ஆம்புலன்சில் மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சில் வந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்புலன்ஸ் டிரைவரான குன்னூரை சேர்ந்த தபரேஸ் (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அபுதாகிர்(22), முகமது (20), அஸ்கர் (19) என்பவர்களுடன் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றதும், பின்னர் மைசூருவில் போதைப் பொருட்களை வாங்கி ஆம்புலன்சில் குன்னூருக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர், ஆம்புலன்ஸ் டிரைவர் தபரேஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 3½ கிலோ போதை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்புலன்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 2 சோதனைச்சாவடிகளில் போலீசார் நிறுத்தியும் நிறுத்தாமல் ஆம்புலன்சில் போதை பொருட்கள் கடத்திய சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story