தந்தை இறந்து ஐந்து மாதங்களில் கார் மோதி பலியான ஒன்றரை வயது குழந்தை ..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 March 2022 6:45 AM IST (Updated: 13 March 2022 6:51 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே தந்தை இறந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில் ஒன்றரை வயது குழந்தை கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சிவகங்கா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒன்றரை வயதே ஆன சர்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 19.10.2021 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மணிமாறன் உயிரிழந்தார். கணவரின் இறப்புக்கு பின் சிவகங்கா குழந்தையுடன் வேளாங்கண்ணி மாத்தாங்காட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்வின், பாட்டி மகேஸ்வரியிடம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கார் சர்வின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் இருந்த சர்வினை நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தந்தை இறந்து ஐந்து மாதங்களிலேயே ஆன நிலையில் ஒன்றரை வயது மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story