வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-22-ம் ஆண்டில், 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், அவர்களின் குடும்பச் செலவுகளுக்கு போதுமானது அல்ல என்றாலும் கூட, செலவுகளை குறுக்கிக் கொண்டு தான், எதிர்கால சமூகப் பாதுகாப்புக்காக வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்கின்றனர். அதன் மீதான வட்டியைக் குறைக்கக்கூடாது.
1989-90 முதல் 2000-01 வரையிலான 12 ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதி மீது 12 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது ஒரு பொற்காலம். ஆனால், அதற்கு பிந்தைய 22 ஆண்டுகளில் 3.90 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. ஓய்வுக்குப் பிந்தைய காலத்தை, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைத்து, நிச்சயமற்றதாக்கி விடக்கூடாது.
தொழிலாளர்களுக்கு எதிர்காலம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி செய்ய அவர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10 சதவீதம் வட்டி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story