நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 1½ வயது குழந்தை உள்பட 14 பேர் ‘லிப்ட்’டில் சிக்கி தவிப்பு


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு 1½ வயது குழந்தை உள்பட 14 பேர் ‘லிப்ட்’டில் சிக்கி தவிப்பு
x
தினத்தந்தி 14 March 2022 12:30 AM IST (Updated: 14 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 1½ வயது குழந்தை உள்பட 14 பேர் ‘லிப்ட்’டில் சிக்கி தவித்தனர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் பிரதான பகுதியில் முதல் தளத்தையும், தரை தளத்தையும் இணைக்கும் வகையில் ‘லிப்ட்' (மின் தூக்கி) உள்ளது. ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்வதற்காக இந்த ‘லிப்ட்’டை பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்காக ‘லிப்ட்’டில் 6 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 1½ வயது குழந்தை என 14 பேர் ஏறினார்கள்.

இந்த நிலையில் ‘லிப்ட்’ திடீரென பழுதாகி முதல் தளத்துக்கும், தரை தளத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டது. இதையடுத்து லிப்டில் இருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். உடனே லிப்ட்டின் உள்ளே கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனாலும் அந்த எண் தொடர்ந்து சில நிமிடங்கள் பிசியாகவே இருந்துள்ளது. ‘லிப்ட்’ ஆபரேட்டருக்கு போன் செய்தும் உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

மீட்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் அபய குரல் எழுப்பினார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல லிப்ட்டின் உள்ளே மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் வியர்வை மழையில் நனைந்தபடி இருந்த அவர்களை இருளும் சூழ்ந்து கொண்டது. இதனால் அவர்களின் பயம் தலைக்கு ஏறியது. இதுதொடர்பாக தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

லிப்ட்டின் மேலே உள்ள பகுதியை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். ஒரு வழியாக இரவு 9.30 மணி அளவில் 1½ வயது கைக்குழந்தை உள்பட 14 பேரும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர். சுமார் 1½ மணி நேர போராட் டத்துக்கு பின்னர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தாய்-பச்சிளம் குழந்தை

‘லிப்ட்’டின் உள்ளே சிக்கியவர்களில் ஒருவர் சூளைமேட்டை சேர்ந்த ரோஜா மற்றும் அவரது 1½ வயது குழந்தை ஜோஸ்னா என்பது தெரியவந்தது. இவர்கள் திண்டிவனத்துக்கு சென்றுவிட்டு வந்தபோது மாட்டிக்கொண்டதாக தெரிவித்தனர்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதானதால் ஏற்பட்ட இந்த சம்பவம் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. லிப்ட் பழுதானதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story