திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு


திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 14 March 2022 2:39 AM IST (Updated: 14 March 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 13 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவை தொடங்கியது. நகரும் படிக்கட்டு இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை விரிவாக்கப்பணிகள் ரூ.3,770 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பாதையையும், ரெயில் நிலையங்களையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த பாதையில் உள்ள முக்கியமான ரெயில் நிலையம் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம். இங்கு ஒரு சில பணிகள் நிறைவடையாததால் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தில் மட்டும் ரெயில்கள் நிற்காமல் சேவை நடந்து வந்தது.

இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை ரெயில் நிலையங்களில் நேற்று முதல் பயணிகள் சேவை தொடங்கியது. ஆனால் இங்கு நகரும் படிக்கட்டு அமைக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணி சிதம்பர வடிவு கூறியதாவது:-

நகரும் படிக்கட்டு வேண்டும்

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே ஒரு ஆண்டாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வந்தாலும், 13 மாதங்களுக்கு பிறகு தற்போது திருவொற்றியூர் தேரடியில் மெட்ரோ ரெயில் நின்று செல்கிறது. இதுமகிழ்ச்சி தான். ஆனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அதிகளவு பயணிகள் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்துக்கு வருவதால் இங்கு நகரும் படிக்கட்டு கண்டிப்பாக அமைக்க வேண்டும். இதற்கு மாற்றாக அமைக்கப்பட்டு இருக்கும் ‘லிப்டு’ மூலம் அதிகளவில் பயணிகள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நிறுத்தும் இடமும் இல்லாததால் பயணிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சேவை தொடங்கியது

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதையையும், ரெயில் நிலையங்களையும் பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே திறந்து வைத்து விட்டதால் திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை ரெயில் நிலையங்களுக்கு திறப்பு விழா என்று தனியாக நடத்தாமல் பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மற்ற ரெயில் நிலையங்களில் இருப்பது போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. பயணிகள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story