கேரள அரசின் செயலை தட்டிக்கேட்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை


கேரள அரசின் செயலை தட்டிக்கேட்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
x
தினத்தந்தி 15 March 2022 12:28 AM IST (Updated: 15 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

தேக்கடியில் உள்ள அலுவலகத்தில் பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசின் செயலை தமிழக அரசு தட்டிக்கேட்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மரங்களை வெட்ட அனுமதி மறுப்பது, பேபி அணையை வலுப்படுத்த தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்காதது, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது என தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

தற்போது தேக்கடியில் அலுவலக பணிகளை பராமரிக்க தேவையான தளவாட பொருட்களை கூட எடுத்துச்செல்ல இடையூறு ஏற்படுத்துவதை பார்க்கும்போது, கேரள அரசின் உறவுதான் முக்கியம், தமிழ்நாட்டின் உரிமை முக்கியமல்ல என்ற நிலைக்கு தி.மு.க. அரசு வந்துவிட்டதோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.

மவுனம் சாதிப்பதா?

தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டிய கேரள அரசு, தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், கூட்டாட்சி கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறுகளை விளைவித்து கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்து பேச வேண்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார்.

நிறைவேற்ற வேண்டிய கடமை

தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளும் இதுகுறித்து எப்போதும் வாய் திறந்து பேசுவதில்லை. இதுபோன்ற நிலை நீடித்தால், சாதாரண பணிகளுக்குகூட நாம் கேரள அரசிடம் மன்றாடி, பணிந்து, அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற நிலைமை மாறி, தற்போது உரிமைக்கு மட்டும் கை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உறவு, தோழமை, நட்பு ஆகியவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, உரிமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே நிலவுகிறது. இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் உண்டு.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, பராமரிப்பு பணிகளுக்கு கூட பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்காமல் தமிழ்நாடு அரசின் வாகனத்தை அங்கேயே நிற்க வைத்திருக்கும் கேரள அரசின் செயலை தட்டிக்கேட்பதோடு, இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கவனத்துக்கு எடுத்துச்செல்லவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகளை தடுத்து நிறுத்தவும், எவ்வித தயக்கமுமின்றி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story