நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்: திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்


நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்: திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 March 2022 2:49 AM IST (Updated: 15 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திருச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார். `அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை' என பேட்டி அளித்தார்.

திருச்சி,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது, சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 20-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டது மற்றும் நில மோசடி ஆகிய வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

20 நாட்களுக்கு பிறகு ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் 2 வாரங்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

திருச்சியில் கையெழுத்திட்டார்

அதன்படி நேற்று முன்தினம் மாலை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திருச்சி வந்து மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு டி.ஜெயக்குமார் வந்தார். அவரை வாசலில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்த இன்ஸ்பெக்டர் சேரன் அங்கேயே நோட்டில் கையெழுத்து வாங்கினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர். பின்னர் போலீஸ் நிலைய வாசலில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு

தமிழகத்தில் விடியாத தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.

1996-ல் அ.தி.மு.க.விற்கு அசைக்க முடியாத தலைமை இருந்தது. அப்போதும் தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டது. இப்போதும் பொய் வழக்கு போடுகிறார்கள். அ.தி.மு.க.வை தற்போது ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகிய இருபெரும் தலைவர்களும் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். ஒற்றை தலைமை தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story