தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்


தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2022 3:41 AM IST (Updated: 15 March 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. என்ற நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் முன்மொழிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு 17.6.2021 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இப்பகுதியின் வளமான வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், இந்த திட்டம், அங்கு நிலவும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

தொடர் சங்கிலி

இந்த நியூட்ரினோ திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட இடம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மதிகெட்டான்- பெரியாறு புலிகள் வழித்தடத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இந்த திட்டப்பணிகளால் அங்கு நடைபெறும் உயிரின பராமரிப்பின் தொடர் சங்கிலி அழிக்கப்பட்டுவிடும்.

தென்மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மலையின் மேற்கு ரிசர்வ் வனப்பகுதிக்குள் இந்த திட்டத்தின் தளம் அமைகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் என்பது, உலக அளவிலான பல்லுயிர்களின் கேந்திரமாக உள்ளது. இது ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உள்ளூர் இனங்களைக் கொண்ட இடமாகும்.

அந்த பகுதி, சம்பல் ஆறு மற்றும் கொட்டக்குடி நதிக்கு குறிப்பிடத்தக்க அளவிலான நீராதார மற்றும் நீர்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. போடி மலையின் மேற்குப்பகுதியில் உள்ள சிற்றோடைகள் கொட்டக்குடி ஆற்றில் கலக்கின்றன. இந்த ஆறு பின்னர் பெரியாறில் கலக்கிறது. பின்னர் பெரியாறு, வைகை அணையில் இணைகிறது.

கைவிட வேண்டும்

இப்பகுதி மக்களின் உயிர்நாடியாக இந்த நீர்நிலை உள்ளது. மேலும் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களுக்கான குடிநீர், விவசாய தேவைகளுக்கு நீரை இது வழங்குகிறது.

எனவே, நீங்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக (ஐ.என்.ஓ.) திட்டத்தை கைவிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story