14 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 86 பேருக்கு கொரோனா


14 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 86 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 March 2022 4:30 AM IST (Updated: 15 March 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 40 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 39 பேரும், பெண்கள் 47 பேரும் உள்பட மொத்தம் 86 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேரும், கோவையில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்பட 22 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரியலூர், திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் 12 வயதுக்குட்பட்ட 23 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 51 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 198 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 37 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 24 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 204 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 1,054 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story