கல்வி மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் மாணவர்களின் சாதி விவரங்கள் பதிவு செய்வது ஏன்?


கல்வி மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் மாணவர்களின் சாதி விவரங்கள் பதிவு செய்வது ஏன்?
x
தினத்தந்தி 15 March 2022 4:40 AM IST (Updated: 15 March 2022 4:40 AM IST)
t-max-icont-min-icon

‘கல்வி மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் மாணவர்களின் சாதி விவரங்கள் பதிவு செய்வது ஏன்?’ என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதி குறித்து பதிவு

கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளத்தின் மூலம் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் சாதி குறிப்பிடுவது குறித்து வெவ்வேறு விதமாக விமர்சனங்கள் எழுகிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும். அதுபோல என்ன சாதி என்று தெரிந்தால்தான், அதற்கான இடஒதுக்கீட்டு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பலன்கள் வழங்கமுடியும். மேலும் மத்திய-மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அது ஏதுவாக இருக்கும். சாதியை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று மாணவர் சேர்க்கையின்போது பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தினால் அது தவறு. இது மாணவர்களின் விருப்பம்.

மாணவர்கள் சாதி தெரியும்போதுதான் அவர்கள் என்ன வகுப்பு? என்பதை அறியமுடியும். நாங்கள் வகுப்பைதான் எடுத்துக்கொள்கிறோமே தவிர, சாதியை பார்க்கவில்லை. அதேவேளை சமுதாய, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் தங்களுக்கான உரிமைகளை கேட்டு பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது.

தேவையற்ற குழப்பங்கள்

2013-ம் ஆண்டில் இருந்தே மாணவரின் சாதியை பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பிறகு விருப்பம் உள்ளவர்கள் சாதியை தெரிவிக்கலாம். விருப்பம் இல்லாதவர்களின் கருத்துகளையும் பதிவு செய்து வந்தோம். கல்வி மேலாண்மை தகவல் மையத்தை பொறுத்தவரை அதிலுள்ள ‘டேட்டா பேஸ்’ பதிவில் மாணவரின் சாதியும் இடம்பெற்றிருந்தது. இனி மாணவரின் சாதி அந்த பதிவில் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். மாணவரின் சாதி அவர் சார்ந்த பிரிவை அறிய மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் ஒரு மாணவரை பற்றி தகவல் தேடும்போது அவர் என்ன வகுப்பு என்பது மட்டுமே வரவேண்டும், சாதி குறித்து தெரியக்கூடாது என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மே மாதத்தில் இருந்து சாதி என்பதே எந்த ‘டேட்டா’ பதிவுகளிலும் இடம்பெறக்கூடாது என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வந்த நடைமுறையை மாற்றியிருக்கிறோம். அதேபோல சுகாதாரத்துறை மூலம் மாணவிகள் உடல்நலம் சார்ந்த சில கேள்விகளை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த கேள்விகளை மாணவர்களிடம் கேட்கலாமா? என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. அதற்குள் இந்த தகவல் கசிந்ததின் காரணமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஆராயாமல் செயல்படுத்த மாட்டோம்

எதையுமே நாங்கள் ஆராயாமல் செயல்படுத்துவது கிடையாது. எனவே எவை தேவையோ... அவை மட்டுமே அதில் இடம்பெறும். மாணவிகள் சங்கடப்படும் வகையில் கேள்விகள் இடம்பெறாது.

நேரடியாக கேட்கக்கூடாத கேள்விகளை சுற்றி வளைத்து கேட்கும் விதமாகவே நமது செயல்பாடு இருக்கும். எனவே கவலைப்பட தேவையில்லை. சங்கடப்படும்படியான கேள்விகள் நிச்சயம் இடம்பெறாது.

தமிழகத்தில் 54 பள்ளிகளில் தமிழ் வகுப்பே இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். அப்படி தெரியும்பட்சத்தில் தமிழ் வகுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அதை வைத்துதான் அரசு வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடு என்றாலும் சரி அதை பயன்படுத்த முடியும்.

அதேபோல கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் ‘டேட்டா என்ட்ரி’ பதிவு பணிகளில் சில இடங்களில் ‘சர்வர்’ கோளாறு பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story